பிஜிலி

பிஜிலி
Photo by Ahalya Hegde / Unsplash

அன்று தீபாவளி. விடியற்காலையிலிருந்தே, நானும் என் தம்பிகளும், பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டோம். விதவிதமான வெடிகள். சங்குச்சக்கரமும், பூத்தொட்டியும், பளீர் என்று கண்ணை பறிக்கும் வெடிகள், வானில் சென்று பலநொடிகள் காத்தபின்னர் வெடிக்கும் ஆகயத்தாமரைப்பூக்கள், லட்சமி வெடி, யானை வெடி, குருவி வெடி, சரவெடி, நூறா?, ஐந்நூறா?, ஆயிரமா?, பத்தாயிரமா?, ஆட்டம்பாம், என்று வெடி வெடித்து கேளிக்கையே எங்கள் வாடிக்கை.

அத்தனையும் வெடித்த பின்பு, எஞ்சியது ஒரு பாக்கெட் பிஜிலி-யென்னும் உதிரிவெடிகளே இருந்தது. அதை ஒன்றொன்றாக படார்-படார் என்று வெடித்துக்கொண்டிருந்தோம். பட்டாசு வெடிப்பதை முழுநாளும் நீடிக்கவேண்டும் என்று எங்கள் கணக்கு. ஒவ்வொருவெடியையும், சுவற்றுக்கட்டையின் மேல் வைத்து, ஊதுவதியினால் பற்றவைத்து, வெடித்து கொண்டிருந்தோம்.

தாத்தா அதை பார்த்துக்கொண்டிருந்தார். “டேய், வாங்கடா இங்கே!”, என்றார். “பிஜிலி வெடிக்கவே தெரியலை. கொண்டாங்கடா அதை!”, என்று இடது கையில் வெடியும், வலது கையில்ஊதுவத்தியையும் எடுத்துக்கொண்டார். “இப்படி வெடிக்கணும்”, என்று, வெடியை பற்றவைத்து, அது சர்-ரென சத்தம் வந்தபொழுது, வானத்தில் தூக்கி எறிந்தார்.

தாத்தா விட்டெறிந்தது ஊதுவத்தியை. வெடி வெடித்தது தாத்தாவின் கையில்.

ஹாஹாஹா, என்று எங்கள் சிரிப்பு வெடி.